வி.பி.கலையரசன், அமமுக  
கட்டுரை

ஆர். கே. நகர் இடைத்தேர்தலை மறந்துவிட்டீர்களா ?

குரல் : வி.பி. கலைராஜன், அமமுக.

பா. ஏகலைவன்

முஸ்லீம்கள் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ‘இனி ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டேன்' என்று உறுதியளித்தார். சொன்னபடியே அந்த கட்சியை ஒதுக்கியே வைத்தார். மோடியா - லேடியா என சவால் விட்டு தனித்து நின்றார். அந்த பாஜக-வோடுதான் இன்று அதிமுக-வினர் கூட்டணி வைத்துள்ளனர்.

அடுத்து அம்மா அவர்கள் மாணவர்களுக்கான நீட் தேர்வை அனுமதிக்காமல் தடுத்து வைத்திருந்தார். எடப்பாடி அரசு அதில் கையொப்பமிட்டு அனுமதித்தது. இன்று நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் வெற்றிபெற முடியவில்லை. 1157 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா இறக்கக் காரணமானது, எடப்பாடி அரசு அனுமதித்த நீட் தேர்வுதான். இது ஏழை எளிய மாணவர்களுக்கு செய்த துரோகம்.

நீட் தேர்வில் தமிழில் இருந்த கேள்விகள் தவறு. அதனால் 196 மதிப்பெண் நமக்கு இழப்பு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கநாதன் வழக்கு போட்டு வெற்றி கண்டார். தேர்வை நடத்திய சி.பி.எஸ்.சி, உச்சநீதிமன்றம் போனது. அங்கு அரசு தரப்பில் வழக்கறிஞரை வைக்காமல் துரோகம் செய்தது எடப்பாடி அரசு. அடுத்தநாளே ‘டாஸ்மாக்' சாராய வியாபார தடை வழக்கிற்கு வழக்கறிஞரை வைத்துக்கொண்டார். ஏழை மாணவ மாணவிகளின் நலனில் அக்கறையற்ற அரசு இது.

உதய் மின் திட்டத்தை அம்மா அவர்கள் ஏற்கவில்லை&அனுமதிக்கவுமில்லை. அதிலும் கையொப்பமிட்டு வரவேற்றுக்கொண்டது எடப்பாடி அரசு. அதனால் தமிழகத்திற்கு 24, 000 கோடி இழப்பு. மேலும் கடன்சுமை கூடியதுதான் மிச்சம்.

காவிரி நதிநீர் விஷயத்தில் உரிமையை பெற்று, அரசு சான்றிதழில் வெளியிடச் செய்தார் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அதனாலேயே 'பொன்னியின் செல்வி' என்ற பட்டமளித்து மகிழ்விக்கப்பட்டார். என் வாழ்நாளிலேயே இன்றுதான்& இந்த காவிரி நீதி பெற்ற நாள்தான் மகிழ்வான நாள் என்று அம்மா கூறினார். இப்போது கர்நாடக அரசு மேகதாது தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு 6000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. தடுக்க வேண்டிய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து நிற்கிறது. காவிரி நதிநீர் பற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை எடுத்துக் கொண்டு டெல்லிக்குச் சென்றார், எடப்பாடி பழனிசாமி. பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். ஒரு மாநில முதல்வருக்கு ஏற்பட்ட அவமானம் அது. தமிழக மக்களையே புறக்கணித்த செயல் அது. அப்படி அவமதித்தவருடன்தான் இன்று கூட்டணி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழர்கள் நலன் கருதி எதை எல்லாம் தடுத்து நிறுத்தியிருந்தாரோ, அதையெல்லாம் மோடி அனுமதித்து, அம்மாவிற்கும், மக்களுக்கும் துரோகம் செய்திருக்கின்றார். இவர்கள்தான் அம்மாவின் நம்பிக்கையானவர்களா? அம்மாவிற்கு துரோகம் செய்தவர்களையா கட்சி தொண்டர்கள் நம்புவார்கள்?

எங்களின் பலம் என்ன என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எவ்வளவு பணத்தை இறைத்திருப்பார்கள்?

எப்படியெல்லாம் தடுத்தார்கள்? அவர்கள் போலியானவர்கள், என்றுதான் அந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் அவர்களை அமோகமாக வெற்றிபெற வைத்தார்கள்.

தொண்டர்களும் மக்களும் இப்போதும் அவர்களை, ‘அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள்& மக்கள் விரோத பாஜகவோடு கூட்டணி வைத்தவர்கள்' என்றுதான் பார்த்து வருகிறார்கள். எல்லா வகையிலும் தமிழகத்திற்கு துரோகத்தை செய்து வந்த& வருகின்ற பாஜக&மோடி அரசுடன் கூட்டணி போட்ட அவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள். மக்களே சரியான தீர்ப்பைத் தருவார்கள்.

புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியும்& தொண்டர்களின் பலமும் எங்கள் பக்கமே இருக்கிறது. மக்கள் எங்களைத்தான் வெற்றிபெற வைப்பார்கள்.

மார்ச், 2019.